Vinayagar Chaturthi 2023: தமிழகத்தில் முதல் முறை....மயிலாடுதுறையில் 10, 008 ருத்ராட்சங்களால் உருவான ருத்ர நடராஜ விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக 10 அடி உயரத்தில் பத்தாயிரத்தி எட்டு ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்ட ருத்ர நடராஜ விநாயகர் சிலை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயக சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.
மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18 -ந் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும், அதன் தொடர்ச்சியாக விற்பனையும் களை கட்டி நடைபெற்று வருகிறது. பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பாக மயிலாடுதுறையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய மாவுகளை கொண்டு ருத்ர நடராஜ விநாயகர் சிலையை காவிரி துலாக்கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது. இதற்காக மயிலாடுதுறை அருகே ராதாநல்லூர் கிராமத்தில் விநாயகர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து முகம் கொண்ட 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களை கொண்டு 10 அடி உயரத்தில் ருத்ர நடராஜ விநாயகர் சிலையை பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஒருகையில் திரிசூலமும், மறுகையில் உடுக்கையுடன் நின்ற கோலத்தில் நடராஜர் ரூபத்தில் இந்த விநாயகர் சிலையானது செய்யப்பட்டு ருத்ராட்சங்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ருத்ராட்சங்களை பயன்படுத்தினால் மனிதர்கள் செய்யும் பாவத்திலிருந்து மோட்சம் கிடைக்கும் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ருத்ராட்சம் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை செய்யப்படுவதாகவும், விநாயகர் விசர்ஜனம் செய்யப்படும்போது ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தாகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.