Vaikunta Ekadasi 2023: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமிகோயிலில் சொர்க்க வாசல் திறப்பு இல்லை
அன்றைய தினத்தில் காலை 5 மணி முதல் மூலவர் ரங்கநாதர் மற்றும் அரங்க நாயகித் தாயாரை முத்தங்கி சேவையில், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
வைகுண்ட ஏகாதசி தினத்தில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோயிலில், வரும் 23-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெறாது என கோயில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் உள்ள அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. இந்த கோவிலை விக்கிரம சோழனுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், வைகுண்ட ஏகாதசி தினத்தில், அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ‘சொர்க்க வாசல்’ சேவைச் சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்வில ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசலில் பக்தர்கள் செல்லும் பொது ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தியுடன் முழக்கமிட்டுவார்கள். இந்த அற்புத காட்சிகளைக் காண ஆயிரமாயிரம் கண்கள் போதாது.
இந்த நிலையில், அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைப்பெற்று வரும் காரணத்தால் இந்த ஆண்டு சொர்க்கவாசல் சேவை கிடையாது எனக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்; ‘‘ஒவ்வோர் ஆண்டும் வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலை 4.30 மணிக்கு உற்சவர் ரங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் ராஜகோபுரக் கதவுகளுக்கு முன்பு எழுந்தருளுவார்.அதனைத் தொடர்ந்து, காலை 5 மணிக்குப் பரமபத வாசலாகக் கருதப்படும் ராஜகோபுர வாசல் திறந்ததும், பெருமாள் கருட வாகன சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து, மூலவர் ரங்கநாதர் மற்றும் அரங்க நாயகித் தாயாரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் திட்டமிட்டு, ராஜகோபுரத் திருப்பணிக்காக கடந்த செப்டம்பர் 3-ம் தேதியன்றே பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து, உபயதாரர்கள் மூலம் ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தில், சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம், அன்றைய தினத்தில் காலை 5 மணி முதல் மூலவர் ரங்கநாதர் மற்றும் அரங்க நாயகித் தாயாரை முத்தங்கி சேவையில், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதோடு, உற்சவர் ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் கண்ணாடி அறையில் காட்சித் தருவார்’’ எனத் அறிவிக்கப்பட்டிருக்கிறது.