Udayar Kovil: பூமியை சுற்றி வரணுமா? அப்போ அம்மாபேட்டை அருகே திருக்களாவுடையார் கோயிலுக்கு வாங்க!!!
Udayar Kovil Thanjavur: பூமியை சுற்றி வருவீர்களா? என்ன கிண்டலா என்று நினைக்க வேண்டாம். ஆனால் இந்த கோயிலை வலம் வந்தால்... இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்பது தெரியுங்களா? அப்படி ஒரு கோயில் இருக்கா?
தஞ்சாவூர்: பூமியை சுற்றி வருவீர்களா? என்ன கிண்டலா என்று நினைக்க வேண்டாம். ஆனால் இந்த கோயிலை வலம் வந்தால்... இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்பது தெரியுங்களா? அப்படி ஒரு கோயில் இருக்கா? எங்கு இருக்கு என்கிறீர்களா? இதோ உங்களுக்காக...
களாச்செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியில் தென்பட்ட சிவலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உடையார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருக்களாவுடையார் கோயில்தான் அது. இந்த கோயில்தான் இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலாக உள்ளது. இந்த கோயிலின் வரலாறு மிகவும் பெருமை வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திரச் சோழன், வெண்ணிப்போருக்கு தயார் ஆகி கொண்டிருந்த போது களாச்செடிகள் நிறைந்திருந்த காட்டை பார்த்தார். அங்கு தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைக்கும் போது சிவலிங்கம் ஒன்று அவரது கண்ணில் பட்டது.
கனவில் தோன்றிய பிரம்மன் கூறிய செய்தி
அன்றிரவே மன்னனுக்கு ஒரு கனவு... அதில் பிரம்மன் தோன்றி “படைப்புத் தொழிலால் உண்டான கர்வம் காரணமாக நான் பாவத்திற்குள்ளானேன். அந்த பாவம் நீங்க ஈஸ்வரனை வேண்டினேன். அவர் என்னை பூலோகத்திற்குச் சென்று சதுர்வேதங்களையும் தீர்த்தங்களாக அமைத்து, இங்குள்ள களாக் காட்டுக்குள் லிங்கத்தை வழிபட்டு வந்தால் பாவம் நீங்கலாம் என்று அருளினார். நான் வழிபாடு செய்த லிங்கத்தையே நீ இன்று கண்டாய். நீ நான்கு புறமும் தீர்த்தம் அமைத்து அதன் நடுவில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பு என்று கூறி மறைந்துள்ளார். மன்னனும் அவ்வாறே செய்தான்.
கரவிந்தீஸ்வரர் என்ற பெயர் பெற்ற இறைவன்
களாச் செடிகளுக்கு மத்தியில் இருந்து கிடைத்ததால் இத்தல இறைவனுக்கு ‘கரவிந்தீஸ்வரர்’ என்றும், இந்த ஊர் ‘கரவிந்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலானது. நான்கு வேதங்களும் நான்கு புறமும் நீராக அமைந்து நடுவே இத்தல இறைவன் வீற்றிருக்கிறார். எனவே திருக்களா உடையார் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. அந்த பெயராலேயே இந்த ஊரும் ‘உடையார் கோவில்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது. அம்மனுக்கு தர்மவல்லி என்று பெயர். கோயில் தல விருட்சமாக களாச்செடி உள்ளது. இந்தச் செடியோடு நன்னாரி கொடியும் படர்ந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத மிகப் பெரிய சிறப்பு.
நான்கு வேதங்களின் பெயர்களில் அமைந்துள்ள குளம்
இந்தக் கோயிலின் கிழக்கில் உள்ள குளத்தின் பெயர், ‘ரிக் வேத தீர்த்தம்’. பங்குனி மாத பவுர்ணமி நாளில் இந்த குளத்தில் நீராடினால் புண்ணியங்கள் வந்து சேரும். தெற்கு பக்கம் உள்ள குளத்தின் பெயர், ‘யஜுர் வேத தீர்த்தம்’. ஆனி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போதும் இந்த தீர்த்தத்தில் நீராடினால், செல்வ வளம் பெருகும். மேற்கு பகுதியில் உள்ள ‘சாம வேத தீர்த்தத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், திருவாதிரை நட்சத்திர தினத்திலும் நீராடினால் ஞானத்தை அடையலாம். வடக்கில் ‘அதர்வண வேத தீர்த்தம்’ உள்ளது. இதில் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.
இந்த தீர்த்தத்தில் நீராடும்போது பஞ்சாட்சர மந்திரத்தை பாராயணம் செய்தால், துன்பங்களில் இருந்து விடுபடலாம். இந்த கோயிலை வலம் வருவது, இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று இந்த நான்கு தீர்த்தங்களிலும் நீராடி வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வரத்தைப் பெறலாம். மேலும் இக்கோயிலில் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
சிவலிங்க பாணத்தில் பிரம்மன் அமர்ந்து பூஜை செய்த அமைப்பு
மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்த கோயிலில் சரஸ்வதிக்கு அருகிலேயே ராகு-கேது உள்ளனர். ராகு-கேது திசை நடைபெறுபவர்கள், இங்கு வந்து சரஸ்வதியை வழிபட்டால் தீமைகள் குறையும். பிரம்மதேவன் பூலோகம் வந்து கரவந்தீஸ்வரரை வழிபட்டதற்கு ஆதாரமாக, இத்தல சிவலிங்கத்தின் பாணத்தில் பிரம்மன் அமர்ந்து பூஜை செய்வது போன்ற அமைப்பு காணப்படுகிறது. என்னங்க பூமியை சுற்றி வர புறப்பட்டு விட்டீர்களா? அட திருக்களாவுடையார் கோயிலுக்கு புறப்பட்டு விட்டீர்களா என்றுதான் கேட்டோம்.