மயிலாடுதுறையில் இருவேறு கோயில் கும்பாபிஷேக விழா - சூரியனார்கோயில் ஆதீனம், ஜீயர் சுவாமிகள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் சூரியனார்கோயில் ஆதீனம் மற்றும் ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த அசிக்காடு கிராமத்தில் கிராம கோயிலான கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலின் திருப்பணி வேலைகள் நிறைவுற்று வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
பின்னர் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் சூரியனார்கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வாயுசுத்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலையில் கீழஉடையார் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த நான்காம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்றது.
தொடர்ந்து, மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து கோபுரத்தை வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்