Tiruvannamalai : காலம் காலமாகத் தொடரும் ஐதீகம்: கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை வைத்து அண்ணாமலையாரை வலம் வந்து நேர்த்திக்கடன்!
புதிய புடவை கொண்டு தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளில் அதில் வைத்து அண்ணாமலையார் கோயிலின் இரண்டு கிலோமீட்டர் மாடவீதியில் சுற்றி வந்து பெற்றோர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

Tiruvannamalai திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து தம்பதிகள் அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து தம்பதிகள் அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் கொடுத்த அண்ணாமலையாருக்கு இனிப்பாக நன்றி செலுத்தும் விதமாக கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்துவது ஐதீகம்.
திருக்கார்த்திகை உற்சவம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது 10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது காலை மாலை என இரு வேலைகளிலும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பலவிதமான வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் என அண்ணாமலையாரை மனம் உருகி பிரார்த்தனை செய்து, அதன்படி பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்தவுடன் அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக திருக்கார்த்திகை தீபதிருவிழாவின்போது பன்னீர் கரும்பு வாங்கி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்து, அதில் புதிய புடவை கொண்டு தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளில் அதில் வைத்து அண்ணாமலையார் கோயிலின் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மாடவீதியில் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷமிட்டு தங்களது குடும்ப உறவுகளுடன் சுற்றி வந்து பெற்றோர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்த பக்தர்கள் குழந்தை பிறந்தவுடன் அண்ணாமலையாருக்கு இனிப்பாக நன்றி செலுத்த வேண்டுமென கரும்பை தேர்வு செய்து அதில் தொட்டில் கட்டி காலம் காலமாக நேர்த்திக்கடன் செய்து வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















