திருவண்ணாமலை தீபத் திருவிழா 2025: பேருந்து வசதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு! பக்தர்களுக்கு காத்திருக்கும் வசதிகள் என்ன?
karthigai deepam tiruvannamalai 2025: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபம் டிசம்பர் 03- தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

Karthigai Deepam 2025 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 முன்னிட்டு பேருந்துகள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல போக்குவரத்து பொது மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் - Tiruvannamalai Arunachaleswarar Temple
உலக அளவில் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், திருக்கார்த்திகை தீபம் தொடர்பான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் இன்று மாவட்ட அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பேருந்துகள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல போக்குவரத்து பொது மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 03.12.2025 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்காலிக பேருந்து நிலையங்கள்
அதன்படி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று மாநகருக்கு வெளியில் மார்கேட்டிங் கம்மிடி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூர்பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது.
மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 4764 பேருந்துகள், 11293 நடைகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக 70 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
தீபத் திருவிழாவுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும், தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திவிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் கிரிவலப் பாதை மற்றும் திருக்கோயில் குறித்த விவரங்களை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய வெளிமாநில பேருந்துகளுக்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் குறித்தும் அப்பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயில் குறித்து முறையான வழிகாட்டி பதாகைகள் அமைக்கவும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.





















