Thirupati: பக்தர்களே! திருப்பதி தரிசனம் ப்ளான் இருக்கா? நாளை தொடங்குது ஆன்லைன் புக்கிங் - எப்போ போக முடியும்?
திருப்பதியில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
உலகப்புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம். திருப்பதியில் இந்தாண்டு இறுதிவரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை இணையவழி டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் டிசம்பர் மாத சாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நாளை தொடங்குகிறது. பக்தர்கள் திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளானது லக்கி டிப் என்று முன்பதிவு செய்யப்பட உள்ளது.
லக்கி டிப் என்றால் என்ன?
லக்கி டிப் டிக்கெட்டுகள் முன்பதிவின்படி சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, நிஜபாத சேவை, அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய சேவைகள் இந்த லக்கி டிப்பில் அடங்கும். இதில் சுப்ரபாத சேவைக்கு அதிக கட்டணம் ஆகும். இந்த சேவைக்கு மட்டும் ரூபாய் 350 வசூலிக்கப்படும். மற்ற சேவைகளுக்கு இயல்பான கட்டணமே ஆகும்.
திருப்பதியில் அதிகாலையில் திருப்பதி ஏழுமலையானுக்காக நடக்கும் முதல் சேவையே இந்த சுப்ரபாத சேவை ஆகும். இந்த சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் பெருமாளுக்கு மிக அருகில் சென்று தரிசனம் செய்ய முடியும். பெருமாளுக்கு மிக அருகில் குலசேகரப்படி வரை சென்று தரிசனம் செய்வதால் இதில் பங்கேற்க பக்தர்கள் போட்டி போடுவார்கள்.
கவனிக்க வேண்டியது:
டிசம்பர் மாதத்தில் சுப்ரபாத சேவையில் பங்கேற்க நினைப்பவர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை மட்டுமே டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும். ஏனென்றால், டிசம்பர் 16ம் தேதி மார்கழி பிறக்கிறது. திருப்பதி மட்டுமில்லாமல் வைணவ தலங்களில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை மட்டுமே அதிகாலையில் ஒலிக்கப்படும். இதனால், மார்கழி மாதத்தில் சுப்ரபாத சேவை இருக்காது.
அதேபோல வைகுண்ட ஏகாதசி அனைத்து வைணவ தலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக, திருப்பதியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி அடுத்தாண்டு வருகிறது. இதனால், இந்தாண்டு வைகுண்ட துவாரம் வழியாக பெருமாளை தரிசனம் செய்ய இ்யலாது. அதற்கான டிக்கெடடுகளை ஜனவரி மாத தரிசன புக்கிங்கின்போதுதான் செய்ய முடியும்.
தொடர் விடுமுறை, பள்ளி விடுமுறை என பல விடுமுறைகள் வருவதால் திருப்பதியில் வரும் டிசம்பர் மாதம் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காணப்படும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.