Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் அதிசயம்! 15 ஆண்டுக்கு பின்னர் இறக்கப்பட்ட கும்பக்கலசம்; கெட்டு போகாத நவதானியம் - ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்
கோபுர கலசத்துக்குள் இருந்த வரகு, தானியம் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அனைவரும் பரவசமும் ஆச்சரியமும் அடைந்தனர்.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகளுக்காக ராஜகோபுரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட 9 கலசங்களில் நவதானியங்கள் தன்மை மாறாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த பணிகளில் விடுதிகள், அன்னதான மண்டபம், பூங்கா, கிரிபிராக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து 137 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராஜகோபுரத்தில் உள்ள ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்கள் மாற்றப்படுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு கோபுரத்திலிருந்து கலசம் கழற்றி பாதுகாப்பாக கீழே கொண்டு வரப்பட்டது. அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த வரகு, தானியம் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அனைவரும் பரவசமும் ஆச்சரியமும் அடைந்தனர்.
இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.