திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா; இணை ஆணையருக்காக காத்திருந்த கொடியேற்றம் - பக்தர்கள் அதிருப்தி
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ம்தேதி நடக்கிறது. 11ம் தேதி திருவிழாவை முன்னிட்டு 24ம் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12ம் திருவிழா சுவாமி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கினார்.
முருகப் பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடக்கிறது. இதில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. பின்னர் 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்திகளிலும் வலம் வந்து கோயிலை சேர்ந்தது.
பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 4.52 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் மேளதாளங்கள் முழங்க ஹரீஸ் சிவாச்சாரியார் கொடியேற்றினார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கொடி மர பீடத்துக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்பத்தில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புல், பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.18மணிக்கு வேதமந்திரம் முழங்க, சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 4.30 மணியளவில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளில் உலா வந்து கோயிலை சேர்ந்தார். இரண்டாம் திருவிழாவான நாளை காலை சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த விழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. 7ம் திருவிழாவான வரும் 20ம்தேதி அதிகாலை சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவையும் மாலையில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 8ம்திருவிழாவான 21ம்தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும் பகலில் சுவாமி சண்முகர் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ம்தேதி நடக்கிறது. 11ம் தேதி திருவிழாவை முன்னிட்டு 24ம் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12ம் திருவிழா சுவாமி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சிக்கான பூர்வாங்க பூஜைகள் ஹரிஸ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் துவங்கியது. அதிகாலை 4:40 மணிக்கு கொடியேற்றத்திற்க்கான பூஜைகள் முடிந்தன. பின்னர் இணை ஆணையர் வருகைக்காக கொடியேற்றும் நிகழ்ச்சி காத்திருந்தன. அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் ஆவேசமடைந்து கொடியை ஏற்றுகிறீர்களா நாங்கள் ஏற்றவா கேட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் இணை ஆணையர் கார்த்திக் வந்ததும் பக்தி கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.