(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி: உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்
சிவகாமியம்மன் - உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில், இன்று திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசனம் செய்தனர்.
கோயிலின் ஸ்தல வரலாறு;
இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது புதிதாக கட்டப்படும் கோயிலை தவிர, முன்னோர்களால் கட்டபட்ட ஒவ்வொரு பெரிய கோயிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. நாம் பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அப்போது நீங்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது சுவாமியின் சிலை உங்களை விட உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உணர்ந்திருப்பீர்கள்.
பூலா நந்தீஸ்வரர் கோயிலின் சிறப்புகள்
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் கோயிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவ பெருமான் காட்சி தருகின்றார். அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.
பழங்காலத்தில் இந்த பகுதிக்கு ‘அள நாடு’ என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம். ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தார் என நம்பப்படுகிறது.
பணியாளரிர் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும் மண்ணுக்கும் வளரத் தொடங்கியது. சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான். உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார். மனனன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
திருக்கல்யாணம்:
அருள்மிகு ஸ்ரீசிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று அம்மனுக்கும், சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.பச்சை மற்றும் ரோஸ் நிற பட்டு உடுத்தி, சிவகாமி அம்மன் பிரியாவிடையுடன் அழைத்து வரப்பப்பட்டார். கோயில் வளாகத்தில் பொன் ஊஞ்சலில் அமர்ந்து, மேள தாளம் முழுங்க பூலாநந்தீஸ்வரருக்கும்,அம்மனுக்கும் சரியாக 11.30 மணிக்கு ஸ்தல அச்சவர்கள் பாலசுப்பிரமணி மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்க மாங்கல்யத்தை சிவகாமியம்மன் கழுத்தில் கட்டி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். சின்னமனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மஞ்சள் தாலி, குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்ட, மஞ்சள் மாங்கல்யங்களை தங்களது கழுத்தில் கட்டி, மனமுருகி வேண்டினர்.