தஞ்சாவூரில் தப்பாட்டம், ஒயிலாட்டத்துடன் புறப்பட்ட விநாயர்கள் சிலை விசர்ஜன ஊர்வலம்
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மூன்றாவது நாளான நேற்று ஆற்றில் கரைப்பதற்காக, தஞ்சாவூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட 70 சிலைகள் சுமை ஆட்டோக்கள், ஆட்டோக்கள் மூலம் தஞ்சாவூர் ரயிலடிக்கு வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 70 விநாயகர் சிலைகள் நேற்று ரயில் நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் 697 விநாயகர் சிலையும், தஞ்சாவூர் மாநகரில் 85 விநாயகர் சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகரத்தில் 85, ஊரகப் பகுதிகளில் 145, திருவிடைமருதூரில் 95, திருவையாறு 77, பட்டுக்கோட்டையில் 133, கும்பகோணத்தில் 87, வல்லத்தில் 36, ஒரத்தநாட்டில் 36 என மொத்தமாக 697 விநாயகர் சிலைகள் மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, அண்ணாநகர், பர்மாகாலனி, மகர்நோன்புச்சாவடி, கீழவாசல், மேலவீதி, வடக்குவீதி, சீனிவாசபுரம், புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை - மாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸார் இரவு -பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மூன்றாவது நாளான நேற்று ஆற்றில் கரைப்பதற்காக, தஞ்சாவூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட 70 சிலைகள் சுமை ஆட்டோக்கள், ஆட்டோக்கள் மூலம் தஞ்சாவூர் ரயிலடிக்கு வந்தது.
பின்பு ரயிலடியில் இருந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், தரை தப்பட்டை, வான வேடிக்கை உள்ளிட்டை வைத்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. தொடர்ந்து காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை வழியாக கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர். ரயிலடியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியதால் அப்பகுதியில், போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது..
வடவாற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட முழுவதும் நேற்று 320 சிலைகள் கரைக்கப்பட்டன.





















