தஞ்சை பெரிய கோயிலில் 1000 கிலோ அரிசியை கொண்டு அன்னாபிஷேக விழா!
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது அன்னம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறார். அதனால்தான் சகல தானங்களிலும் உயர்ந்தது அன்னதானம் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட உயர்வான அன்னத்தை ஈசனின் திருமேனியில் முழுமையாக சாத்தி வழிபடும் நாளே அன்னாபிஷேகத் திருநாள்.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமையை உயர்த்தும் வகையில் பெரிய கோயிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறது.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு இக்கோயில் மாபெரும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இந்த பெரியகோயிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டும் நேற்று பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாலை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் மாலை வரை காத்திருந்து அன்னாபிஷேகத்தில் சிவனை வழிப்பட்டு மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.