பழனியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூசத்தேரோட்டம்
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற பிப்ரவரி 4ம்தேதி நடைபெறவுள்ளது.
பழனி முருகன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு குடமுழுக்கு விழா நிறைவடைந்த நிலையில், தைப்பூசத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், முதல் நாளன நேற்று பழனி ஊர் கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
Cyber Crime: மக்களே உஷார்..! புதுப்புது யுக்தியுடன் உலா வரும் சைபர் திருடர்கள்.. தப்பிப்பது எப்படி?
தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
மறுநாள் 4-ந்தேதி சனிக்கிழமை தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர தொடங்கியுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்