Thaipusam 2023 : தைப்பூசம், பெளர்ணமி.. திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசம், தை பெளர்ணமி திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒரு சேர வரும் நாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் . இந்த நிலையில் தைப்பூசத் திருநாள் முருகனின் திருத்தலங்கள் அனைத்திலும் நேற்றைய தினமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அனைத்து நாள்காட்டிகளிலும் இன்று (நேற்று) தைப்பூசம் என குறிக்கப்பட்டிருந்ததால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டும் தை பௌர்ணமியை முன்னிட்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடம் ஏந்தியும் கிரிவலம் வந்து அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் 11 மணி அளவில் நடைபெற்றது. திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம், மதுரை திருமங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யக்கூடிய சூழல் உருவானது.
இதனால் வரிசையில் நின்ற பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிக அளவில் இருந்ததால் காத்திருக்க முடியாத சூழலில் உள்ள பக்தர்கள் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பகுதியில் குவிந்ததால் விரைவு தரிசன வழியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலை உருவானது கூட்டத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்தது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thaipusam 2023: களைகட்டிய தைப்பூசத்திருவிழா : அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதருடன் தேரோட்டம்.. பழனியில் கோலாகலம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்