Thaipusam 2024: பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்
பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தைப்பூச திருவிழா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகன் தங்க கவசம் அணிந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். இதேபோல் செஞ்சி கிருஷ்ணாபுரம்-கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 108 திரவிய அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம், கோவில் குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், தீமிதித்தல், அலகு குத்துதல், வேல் குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி லாரி, கிரேன், டிராக்டர் போன்ற பல்வேறு வாகனங்களை இழுத்தபடி ஊர்வலமாக பறக்கும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் திருமுருகன் சுவாமிகள் மற்றும் கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.