Edappadi Palaniswami: தைப்பூசத்தை முன்னிட்டு தனது தோட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்
சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தோட்டத்தில் உள்ள பழனியாண்டவர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
தமிழகம் முழுவதும் தைப்பூச விழா இன்று முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று முருகனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தைப்பூச திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தைப்பூச திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது தோட்டத்தில் உள்ள பழனியாண்டவர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தைப்பூச தின நிகழ்வாக நெடுங்குளம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து காவடி மற்றும் தீர்த்த குடம் ஏந்திய குழுவினரின் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்த போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் வரவேற்றார். இதனை தொடர்ந்து, அவருக்கு பரிவட்டம் கட்டி, மேளதாளங்களுடன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். முருகனுக்கு காவிரி தண்ணீர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சேர்ந்து முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தைப்பூச திருவிழாவை ஒட்டி அதிமுக சார்பில் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.