Thai Amavasai 2023: தை அமாவாசையில் தர்ப்பணம்; கட்டாயம் செய்யக் கூடியதும்.. செய்யக் கூடாததும்..! முழு விபரம் இதோ..!
Thai Amavasai Tharpanam: தை அமாவாசையில் ஏன் தர்ப்பணம் செய்கின்றோம் அதனால் எற்படும் பயன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
அமாவாசை என்பது உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று இணைவதால் அதன் மூலம் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசை தினத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை அவர்கள் வளர்ந்த பின்னர் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக வேலை செய்யும் எனப்து நம்பிக்கை. அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாக செயல் படும், ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்வார்கள். அமாவாசை தினத்தில் பிறப்பவர்களில் பலருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதாக கூறப்படுகிறது. அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம் கடந்த முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. முன்னோர்கள் உயிருடன் இருந்த போது, அவர்களை சரிவர கவனிக்காமல் இருப்பவர்களுக்கு, முன்னோர்கள் அடையும் துன்பங்கள் அனைத்தும், பாவத்தின் வடிவமாகி கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக நம்பப்படுகிறது. பாவங்களிலேயே பெரிய பாவமாக கருதப்படுவது காலம் கடந்த முன்னோர்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான்.
நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் அதாவது நமது முன்னோர்கள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் இறந்த பின்னர் அவர்கள் ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு தவறாமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள் என நம்பப்படுகிறது. இதனால் பித்ருக்கள் தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்களாம். ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறியுள்ளார், இதில் இருந்தே தர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
அமாவாசை தினத்தில் காலையிலேயே ஆறு, கடல் போன்ற நகரும் நீர் நிலைகளுக்கு சென்று தலை மூழ்கி நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்கள் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரமாக இருக்காது, மேலும் அந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பதும் பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நேரமாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தர்ப்பணம் கொடுப்பவர் தனது கோத்திரம், குலதெய்வம் மற்றும் தனது மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு வந்து காலம் கடந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் காலம் கடந்த முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுவகைகளை இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். அதன் பின்னர், கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தான் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்ய வேண்டும்.
தர்ப்பணத்தின் போது செய்ய கூடாதவை
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம்.
Thai Amavasai 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?