Sabarimala Temple: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்: தமிழ்நாடு அரசு கடிதம்.. முழு விவரம் உள்ளே..
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் கேரள தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு தமிழ்மாதம் பிறப்பு அன்று திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்று அடுத்த சில நாட்களில் நடை அடைக்கப்படும். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்த காலக்கட்டத்தில் 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. குறிப்பாக தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்யும் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கும் நிலையில், அவ்வாறு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங்கும் செய்யப்படுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கிட்டதட்ட 15 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது.
மகர ஜோதி இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் பக்தர்களின் அதிக கூட்டம் கருத்தில் கொண்டு நேற்று முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினசரி சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் ஸ்தமித்து போயுள்ளது என்றே கூறலாம். எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 13 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 15 ஆம் மகர ஜோதி கொண்டாடப்படும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் கேரளா தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சபரிமலையில் சாமி கும்பிடுவதற்கு நீண்ட நேரம் ஆவது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கேரள தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கேரள மாநில தேவஸ்தான போர்டு அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்திலும் இதுவரை பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த 45 வருடங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நானும் செல்கிறேன். ஒரு மணி நேரத்தில் 3500 பேர் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நடை திறந்திருப்பதால் சராசரியாக 58 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் ஒரு லட்சம் பேர் நாள்தோறும் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. நெய் அபிஷேகம் பார்ப்பதால் சிலர் இரவில் தங்கும் சூழலும் நிலவுகிறது. ஆனால் இத்தகைய கூட்டத்தை கேரளா அரசு திறமையாக கையாளுகிறது. வரும் காலங்களில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையில் திட்டங்கள் வகுத்து வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.