50 ஆண்டுகளாக ரதவீதி வராத ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலய தேர்! சிதைந்திருக்கும் அவலம் - கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை?
சித்திரைத் திருவிழாக்களின் போது கைலாசநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்பு பெற்ற நவதிருப்பதி ஆலயங்களும் நவகைலாய ஆலயங்களும் நவக்கிரகங்களின் வடிவில் அமைந்துள்ளன. நவகைலாய கோயில்களில் ஆறாவது ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் உடனுறை சிவகாமி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் சனி ஸ்தலமாக இருக்கும் இந்த கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.
50 ஆண்டுகளாக பழுது:
இந்த கோயிலின் சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முன் காலத்தில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்று வந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கோயில் தேர் பழுதுபட்டதால் தேரோட்டம் முற்றிலும் நின்று போனது. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் கைலாசநாதர் ரத வீதி தேரோட்டம் நடைபெறவில்லை. கலை நயம் மிக்க மர சிற்பங்கள் நிறைந்த கோயில் தேர் மலையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் முற்றிலும் சேதம் ஆகிவிட்டது. தேரின் சக்கரங்கள் உடைந்து விட்டன. பழுதான தேடி சரி செய்து மீண்டும் சித்திரைத் திருவிழாவின் போது தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் இந்து சமய அறநிலையைத் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அறநிலையத்துறை கண்டுகொள்ளுமா?
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் சுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில் தேர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாமல் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேரினை சரி செய்து இயக்குவதற்கு அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 1.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவதாக தெரிவித்துள்ள அம்மனுவில், நிதியினை விரைவாக வழங்கி ஆண்டுதோறும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அளித்துள்ள பதிவில், கோயில் திருப்பணிக்கு மதிப்பீடு திட்டம் தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் பொது நல வேண்டி அனுப்பப்பட்டுள்ள கோப்புகள் நகரும் நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் சித்திரைத் திருவிழாக்களின் போது கைலாசநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோயிலின் ஸ்தல வரலாறு
அகத்திய மாமுனிவரின் சீடரான உரோமச முனிவர் பிறவா வரத்துடன் சிவ முக்தி அடைய வேண்டி பொதிகை மலையில் கடுந்தவம் புரிந்தார். அவரது கடுந்தவத்தைக் கண்ட அகத்திய மாமுனிவர், சிவபெருமானை தியானித்து ஒன்பது மலர்ளை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட சொன்னார் . அவரின் ஆணை படி முனிவர் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார்.அம்மலர்கள் தாமிரபரணி தீர்த்த தலங்களில் ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு கூறினார்.
அதன்படி மலர்கள் தங்கிய இடமான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், சங்காணி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்தமங்கலம் ஆகிய இடங்களில் சிவவழிபாடு செய்தார், பின்னர் கிரகங்களின் பாதிப்பு தோஷம் நீங்கி சிவமுக்தி அடைந்தார். அத்தாமரை மலர்களில் ஆறாம் மலர் ஒதுங்கி உரோமச முனிவரால் திருக்கோயில் எழுப்பி வழிபடப்பட்ட திருத்தலம் இதுவாகும் . நவகைலாயங்களில் இத்திருத்தலம் சனி கிரக தோஷம் நிவர்த்தி தலமாகும்