Pongal 2023: வந்தது பொங்கல் திருநாள்.. மயிலாடுதுறை மயூரநாதருக்கு 250 லிட்டர் நெய்யினால் சிறப்பு அபிஷேகம்..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அம்பாளுக்கும், சுவாமிக்கும் 250 லிட்டர் நெய்யினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்து சொந்தமான 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல்பெற்ற அபயாம்பிகை உடனான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக ஐதீகம்.
இந்த ஆலயத்தில் பொங்கல் திருநாளன்று, மாயூரநாதர் சுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகைக்கு ஆலயங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. அதனால் ஒருநாள் முன்னதாக சிறப்பு அபிஷேகம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தாண்டு எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால் வழக்கம்போல் பொங்கல் அன்று நடைபெறும் நெய் அபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
Pongal 2023: தமிழ்நாடு வாழ்க: தமிழர் தரணியாள, உழைப்பை வணங்குவோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
இதையொட்டி கோயில் நடை அதிகாலை முதல் திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் அளித்த 250 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
'இன்பமும், இனிமையும், நலமும், வளமும்’ : பொங்கல் பண்டிகை. அரசியல் தலைவர்கள் வாழ்த்து..
தொடர்ந்து அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 108 லிட்டர் நெய்யினால் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக 142 லிட்டர் நெய்யுடன் மொத்த 250 லிட்டர் நெய்யினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள், கோயில், நடன பள்ளி மாணவர்கள் என மாவட்ட முழுவதும் பொங்கல் வைத்து கொண்டாட்டம். மாணவர்கள் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து நடனமாடி உற்சாகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் தனியார் இசை மற்றும் நடனக்குழு பயிற்சி மாணவர்கள் பாரம்பரிய உடையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மண் பானையில் பொங்கல் பொங்கி பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியுடன் ஒவ்வொருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பராம்பரிய உடையில் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடி குதூகலமிட்டனர். இதேபோல் கோயில்கள், வீடுகளில் பொங்கல் வைத்து படையல் இட்டு பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி கோயில்களும் சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற