பல நூற்றாண்டுகளுக்கு பின் சதய விழாவில் இசைக்கப்பட்ட 'சகோட யாழ்' இசை!
நாடி நரம்புகளை ஊடுருவிய “சகோட யாழ்” இசை... பல நூற்றாண்டுகளுக்கு பின் சதய விழாவில் இசைக்கப்பட்டது
தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவில் பல நூற்றாண்டுகளுக்கு பின்பு "சகோட யாழ்" இசைக்கப்பட்டது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடந்த சதயவிழாவில் பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சகோட யாழ் எனும் பழமையான பண்ணிசை கருவியை ஓதுவார்கள் இசைத்தனர். இனிய கானம் எழுப்பிய சகோட யாழ் அனைவரையும் மயக்கியது.
7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள், திருவாரூர் தியாகராஜர் கோயில் தினமும் பாடப் பெற்றதை கேட்ட மாமன்னன் ராஜராஜசோழன், இந்த பாடலின் மூலப் பொருட்கள் அடங்கிய ஏடுகள் எங்குள்ளது என தேடினார்.
அப்போது நம்பியாண்டவர் நம்பி, தேவார ஏடுகள் தில்லையில் உள்ளதாக கூறினார். இதையடுத்து மாமன்னன் ராஜராஜசோழன் தில்லையாகி சிதம்பரத்துக்கு தேவார ஏடுகளை மீட்க சென்றபோது, அவருடன் சென்றவர்கள் "சகோட யாழ்" எனப்படும் பண்ணிரு இசைக் கருவியை தில்லையில் இசைத்தும், அங்கிருந்த அந்தணர்களிடம் பேசியும் தேவார ஏடுகளை மீட்டெடுத்தார்.
சகோட யாழ் எனப்படும் பண்ணிரு இசைக்கருவியானது 14 நரம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நரம்புகளை மீட்கும்போது ஏற்படும் இசையே ஓதுவார்கள் இசைத்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சகோட யாழ் இசைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு காலப்போக்கில் இந்த இசைக்கருவியானது மறைந்து போனது.
இந்நிலையில் பழமையான இந்த சகோட யாழ் இசைக் கருவியை ஓதுவார்கள் முழு முயற்சி எடுத்து அதனை மீட்டுருவாக்கம் செய்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற ராஜராஜசோழன் சதயவிழாவின்போது, திருமுறைகள் சிறப்பு வழிபாட்டின்போது இசைத்து திருவீதியுலாவாக எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் பெரிய கோயில் ஓதுவார் சிவனேசன் கூறுகையில்: மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் ஓதுவார்களால் இசைக்கப்பட்ட பழமையான இசைக்கருவியான சகோட யாழ், காலப்போக்கில் மறைந்து போனது.
இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு ஓதுவார்களுக்கு சகோட யாழ் குறித்து விழிப்புணர்வும், அதை இசைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஓதுவார்களின் முழு முயற்சியுடன் இந்த பழமையான சகோட யாழ் இசைக்கருவி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பூஜைகள் செய்யப்பட்டு இசைக்கப்பட்டது. தொடர்ந்து இனி தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் இந்த இசைக்கருவியை இசைக்க ஓதுவார்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.