Sabarimala Puthari Puja : சபரிமலையில் நடந்த பிரசித்தி பெற்ற நிறைப்புத்தரிசி பூஜை.. என்ன சிறப்பு?
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு மாதமும் சபரிமலையில் ஏராளமான பூஜைகளும், விழாக்களும் நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம் 17-ஆம் தேதி பிறந்த ஆடி மாதம் வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
வழக்கமாக ஆடி மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
புத்தரிசி பூஜை என்றால் என்ன?
நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிப்பாக நடைபெற்று மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்காக நன்றாக விளைந்த புதிய நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள் 51 கட்டுகளாக கட்டப்படும். கட்டப்பட்ட நெற்கதிர்களை பட்டு வஸ்திரம் சுற்றி அலங்கரிப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட நெற்கதிர்கள் ஐயப்பன் கோவிலின் ஆபரணப் பெட்டியில் வைக்கப்படும். அந்த ஆபரணப்பெட்டிகளை தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வருவார்கள்.
இந்த புத்தரிசி பூஜைக்காக வழக்கமாக கொல்லம் மாவட்டத்தில் உள்ள அச்சன்கோவிலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்து நெற்கதிர்கள் வழக்கமாக கொண்டு வருவார்கள்.
முதல் போக சாகுபடியில் விளைந்த இந்த நெற்கதிர்களை சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறைக்குள் எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்வார்கள். இதுவே புத்தரிசி விழா அல்லது நிறைப்புத்தரிசி பூஜை என்று கூறுவார்கள்.
பக்தர்கள் கூட்டம்:
நிறைப்புத்தரிசி விழாவிற்காக நடப்பாண்டில் ஐயப்பன் கோவிலின் பூங்காவனத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களும் பயன்படுத்தப்பட்டன. ஐயப்பனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட இந்த நெற்கதிர்களை சபரிமலை தந்திரி கண்டறாரு, பிரம்மதத்தன் மேல்சாந்தி நம்பூதிரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
பூஜையில் வைக்கப்படம் நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். நடப்பாண்டிற்கான புத்தரிசி விழாவிற்காக நேற்று மாலையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் நிறைப்புத்தரிசி விழா வெகு விமர்சியைாக நடைபெற்றது.
மீண்டும் நடைதிறப்பு எப்போது?
நிறைப்புத்தரிசி விழாவிற்காக நேற்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. பின்னர், ஆவணி மாத பூஜைக்காக வரும் 16-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 21-ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
பின்னர், ஆவணி மாதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவான திருவோணம் திருவிழாவிற்காக வரும் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் கோயில் நடை திறந்திருக்கும்.
மேலும் படிக்க: Sumangali Pooja: ஆடி மாதத்தில் அனுசரிக்கப்படும் சுமங்கலி பூஜை... வீட்டில் செய்வது எப்படி?
மேலும் படிக்க: Aadi krithigai 2030: பழனி முருகன் கோயில் கிருத்திகை உற்சவ திருவிழா; அரோகரா கோசங்களுடன் பக்தர்கள் வழிபாடு