Rudraksha: ஆன்மீக பாதையில் இருப்பவருக்கு ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மை என்னென்ன?
Maha Shivarathri Rudraksha : ஆன்மீக பாதையில் இருப்பவருக்கு ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Rudraksha : ஆன்மீக பாதையில் இருப்பவர்களில் பலர் ருத்ராட்சம் அணிந்திருப்பதை பார்க்க முடியும். நம் மரபில் பல நூற்றாண்டாக யோகிகள், ஆன்மீக சாதகர்கள் ருத்ராட்சத்தை அணிந்து வந்திருக்கிறார்கள். மேலும் ஆன்மீக ரீதியான நேர்மறை ஆற்றல் நிரம்பிய பொக்கிஷமாக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது.
நாம் செய்யும், இயங்கும் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்கிற நம் எண்ணத்தின் அடையாளமாக ருத்ராட்சம் அமைகிறது. மேலும் ருத்ராட்சத்தில் இருந்து எழும் தனித்துவமான எதிரொலி, அதை அணிபவருக்கு நேர்மறை ஆற்றலின் கவசத்தை உருவாக்குகிறது. மேலும் ருத்ராட்சம் அணிதல் என்பது ஏதோவொரு வகையான ஆபரணம் அணிவதை போன்றது அல்ல. அது உள்நிலை மாற்றத்திற்கான கருவியாக பார்க்கப்படுகிறது.
இந்த ருத்ராட்சம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் வளரும் Elaeocarpus Ganitrus என்ற தாவரவியல் பெயருடைய மரத்தின் விதைகளாகும். மேலும் ருத்ராட்சம் குறித்து சொல்லப்படும் புராணம் என்னவென்றால், ருத்ரா என்ற வார்த்தைக்கு சிவன் என்றும், ஆட்சம் என்ற வார்த்தைக்கு கண்ணீர் என்றும் பொருள். எனவே ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்ணீர் துளிகள் என்று அர்த்தம். ஒரு முறை சிவன், நீண்ட நெடுங்காலமாக தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்குள் எழுந்த பேரானந்தத்தால் அவர் அப்படியே அசைவின்றி அமர்ந்திருந்தார். அவருடைய சுவாசம் கூட வெளியே தெரியாத அளவு அத்தனை ஆழமாக இருந்தது அவர் தியானம்.
அவரை காண்போர், அவர் மரணித்திருக்க கூடும் என்று கூட நினைத்தனர். ஆனால் அவர் உயிருடன் இருந்ததற்கு ஒரே ஒரு சாட்சி மட்டுமே இருந்தது. அது பேரானந்தத்தின் வெளிப்பாடாக அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர். பூமியின் மீது விழுந்த அந்த கண்ணீர் துளிகளே ருத்ராட்சம் ஆனது என்பது புராண கதை. இத்தகு புனிதமான ருத்ராட்சம், ஒருவரின் உடல் மற்றும் மனம் சமநிலையை அடைய உதவுகிறது. மேலும் ஆன்மீக சாதனாவில் ஈடுபட்டு இருப்பவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல், மனம் மற்றும் மனதளவிலான பிரச்சனையால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய அதன் ஆற்றலால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
இனம், மதம், நாடு, பாலினம், கலாச்சாரம் ஆகிய பாகுபாடுகள் தாண்டி எவரும் ருத்ராட்சம் அணியலாம். மனநிலையும் உடல்நிலையும் எப்படி இருந்தாலும், ஒருவர் தன் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் ருத்ராட்சம் அணியலாம். அதன்படி, சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆதியோகிக்கு அணிவிக்கப்பட்ட ருத்ராட்சங்கள் மகாசிவாரத்திரிக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது வருகிறது. இது போன்ற வாய்ப்பு இந்த ஆண்டு மஹாசிவராத்திரியின் போதும் நடைபெறவுள்ளது.
இதன் முக்கிய நோக்கமே ஆதியோகியின் அருள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த அடிப்படையிலேயே ஆதியோகியை சுமந்தபடி 4 ரதங்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அன்று ஈஷா யோக மையத்திலிருந்து புறப்பட்டு தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. பல்லாயிரம் கி.மீ உலா வரும் இந்த ரதங்கள் மஹாசிவராத்திரி அன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.