Parthasarathi Temple: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அளிக்கப்பட்ட தங்கச்சடாரி.. என்ன சிறப்பு?
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு பிரபல நகைக்கடையான சலானி குடும்பத்தின் சார்பாக 850 கிராம் மதிப்புள்ள தங்கச்சடாரி வழங்கப்பட்டது
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு பிரபல நகைக்கடையான சலானி குடும்பத்தின் சார்பாக 850 கிராம் மதிப்புள்ள தங்கச்சடாரி வழங்கப்பட்டது.
108 வைணவ தளங்களில் ஒன்று தான் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பார்த்தசாரதி கோயில், இந்த கோயில் 60 வது வைணவ தளமாக கருதப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 9 அடி மூலவர் பெருமாள் –பார்த்தசாரதி மீசையுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வைகுண்ட ஏகாதேசி அன்று இந்த கோயிலில் இருக்கும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், சலானி தங்க நகைக்கடையின் உரிமையாளரும் தங்கநகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி 850 கிராம் எடையுள்ள தங்க சடாரியை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாளுக்கு காணிக்கையாக பார்த்தசாரதி கோயிலின் துணை ஆணையர் பெ.க.கவெனிதா அவர்களிடம் வழங்கினார்.
சடாரி என்பது பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்த பின்னர் தலையில் வைக்கப்படும். பார்ப்பதற்கு கோயில் கோபுரம் போல் இருக்கும் சடாரி, பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் தெய்வத்தின் பாதங்களாகும்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்திலால் சலானி, ”தங்களது குடும்பத்தின் சார்பாக தங்க சடாரியை வழங்கியதாகவும், பக்தர்களின் வேண்டுகோள் மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு இதை வழங்கியுள்ளதாகவும் கூறினார். 850 கிராம் மதிப்புள்ள இந்த தங்கச்சடாரி கடந்த ஆறுமாத காலமாக முழுக்க முழுக்க கைகாளால் செய்யப்பட்டு பார்த்தசாரதி பெருமாளுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறினார். மேலும் இதை வழங்குவதற்கு எந்த நேர்த்திக்கடனும் இல்லை என்றும் அனைத்துப் பெரிய கோவில்களிலும் தங்கச்சடாரி இருக்கிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தங்கச்சடாரி இல்லாத காரணத்தால் கோவில் அறங்காவலர் உள்ளிட்டோரிடம் அனுமதி பெற்று இதை வழங்கியுள்ளதாகவும், இந்த சடாரியின் மதிப்பு சுமார் 55 லட்சம் என்றும் தெரிவித்தார். இந்த சடாரியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர், அதன்படி செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் பல நூற்றுண்டுகள் இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய இந்த தங்கச்சடாரி பயன்படும்” என்றார்.
இதற்கு முன் சலானி குடும்பம் சார்பாக 2020ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு பல லட்சம் மதிப்பிலான பாண்டிய கொண்டை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.