Palani Temple: முருக பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து - காரணம் என்ன?
Palani Temple: பழனியில் பங்குனி உத்திர திருவிழா நான்காம் நாளான இன்று மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
இந்த கோவிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தற்போது பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5 ம் தேதி திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முக்கிய நிகழ்வான ஆறாம் நாளான வருகின்ற பத்தாம் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி ,தெய்வானை திருக்கல்யாண வைபவமும் பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழாவான அன்று மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா நான்காம் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து குவிந்து வருகின்றனர். மேலும் படிப்பாதை ,யானை பாதையில் பக்தர்கள் சென்று வருகின்றனர். மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு தங்கமயில் வாகனத்தில் முருகபெருமான் வலம் வந்த காட்சி தருவர் . மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வரும் 10,11,12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.





















