பக்தர்களே... பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா..?
பழனிக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது.
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
பழனி முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி , தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து பழனிக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது.
சித்திரை மாத திருவிழா மற்றும் பள்ளி கல்லூரிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தது. இதனை முன்னிட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள் வங்கி ஊழியர்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரத்து 650 ரூபாயும், தங்கமாக 571 கிராம், வெள்ளியாக 11,856 கிராம் , சிங்கப்பூர் மலேசியா இலங்கை இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி 291 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. மேலும் பக்தர்கள் செலுத்திய தங்கம் வெள்ளியிலான வேல், தாலிச்செயின், தங்கக்காசு, சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன.




















