தைப்பூசத்தால் நிரம்பிய பழனி கோயில் உண்டியல்கள்... முருகனுக்காக பக்தர்கள் கொடுத்த காணிக்கை - வசூல் எவ்வளவு?
14ஆம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.3.31 கோடியை தாண்டியது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 5 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11ம் தேதி மாலை நடைபெற்றது. ஊர்க்கோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை சமேதராக தேர் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 12ம் தேதி மாலை 4.30மணியளவில் துவங்கிய தேரோட்டம் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர்.
பின்னர் வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அரசு அதிகாரிகள், பழனிநகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதேபோல தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப தேரோட்டம் நிகழ்ச்சி 14ஆம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைந்தது. இவ்விழாவினை முன்னிட்டு தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழா காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது. பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3 கோடியே 31 இலட்சத்து 92 ஆயிரத்து 776 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
த ங்கம் 557கிராமும், வெள்ளி 21235 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1153 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

