பழனி கோயில் உண்டியல் காணிக்கை: ரூ. 2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரம் வசூல்
கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் தொடங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோயில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் செலுத்துகின்றனர்.
TN Rain Alert: தமிழகத்தில் இன்றைய மழை அப்டேட் இவ்வளவுதான்... தெரிஞ்சிக்கோங்க!
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் தொடங்கியது. இதற்கு கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது. இதில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று முடிவடைந்த பணியில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 வருவாயாக கிடைத்தது.
மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 300 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 840 கிராம் தங்கத்தலான பொருட்கள், 18 ஆயிரத்து 125 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்று நடைபெறும் என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வருபவர்களை கண்காணிக்க ரூ.3½ லட்சத்தில் கருவி வாங்கப்பட்டு கார்த்திகை மண்டப நுழைவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. பணிக்கு வருவோரை கண்காணிக்கும் வகையில் ’அக்சஸ் டிடெக்டர் கன்ட்ரோல்’ கருவி வாங்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் கோவில் மற்றும் கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து மண்டபத்துக்கு வருவர்.
ஆனால் தற்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வருவோருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும் 2 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். அடையாள அட்டை அணிந்தவர் உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும் இந்த கருவியை கடந்து செல்ல வேண்டும். அப்போது அவருடைய முகம் ஏற்கனவே கருவியில் பதிவாகி இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே நுழைவுவாயிலில் உள்ள தடுப்பு தானியங்கி மூலம் திறக்கப்படும். அதன் பின்னர் தான் அந்த நபர் காணிக்கை எண்ணும் மண்டபத்துக்குள் செல்ல முடியும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்