Palani Murugan: ஏழைப்பெண் வடிவில் வந்திறங்கிய பழனி முருகன்.. நிகழ்ந்த அற்புதம்!
பின்னர் பழனிக்கு சென்று பழத்தை ஒப்படைத்தான். அதற்கான பில்லையும் பெற்றுக் கொண்டான். ஜமீன்தாரிடம் கொண்டு கொடுக்க, அன்று இரவு அவர் நிம்மதியாக படுத்து தூங்கினார்.

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனைப் பற்றி பல்வேறு அற்புதமாக கதைகள் சொல்லப்படுகிறது. அந்த வகையில் பழனி மலை முருகனைப் பற்றிய கதை ஒன்றைப் பார்க்கலாம்.
முருகனின் அறுபடைகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளது. இங்கு பால தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அவரைக் காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். இந்த நிலையில், முருகனைப் பற்றி சொல்லப்படும் கதையைக் காணலாம்.
அதாவது, “பொள்ளாச்சியில் ஒரு ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஆண் பிள்ளை இல்லாமல் இருந்தது. முருகனிடம் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என வேண்டிக் கொண்டார். தான் வேண்டியது நிறைவேறினால் சுமார் பத்தாயிரம் வாழைப்பழம் பஞ்சாமிர்தம் செய்ய கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அவருக்கு சில காலம் கழித்து ஆண் பிள்ளை பிறந்தது. வண்டிக்காரனை அழைத்து அத்தனை வாழைப்பழத்தையும் ஏற்றி விட்டார். அவனும் போய்க்கொண்டே இருந்தான்.
பழனி செல்லும் வகையில் நெய்க்காரன்பட்டி என்ற ஊர் இருக்கும். அங்கு சென்றபோது டீ குடிக்க வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து அய்யா பசிக்கிறது, எனக்கு ஏதாவது காசு இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அவரோ, நானே வண்டிக்காரன்மா.. என்னிடம் காசு இல்லை. நானே பழம் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் இத்தனை பழம் ஏற்றிக்கொண்டு போகிறீர்களே, எனக்கு ஒரு 3 பழங்கங்கள் கொடுக்க மாட்டீர்களா என கேட்டுள்ளார். சரி என வண்டிக்காரன் அந்த பெண்ணுக்கு இரண்டும், குழந்தைக்கு ஒன்றும் கொடுத்தான்.
பின்னர் பழனிக்கு சென்று பழத்தை ஒப்படைத்தான். அதற்கான பில்லையும் பெற்றுக் கொண்டான். ஜமீன்தாரிடம் கொண்டு கொடுக்க, அன்று இரவு அவர் நிம்மதியாக படுத்து தூங்கினார். அதிகாலை 3 மணிக்கு ஒரு கனவும் ஜமீன்தாருக்கு வந்தது. அதில் முருகன் வந்து, நீ கொடுத்துவிட்ட 3 பழம் எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார். இதனைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த ஜமீன்தார், வண்டிக்காரன் மேல் கடும் கோபம் கொண்டார்.
நான் பத்தாயிரம் பழம் கொடுத்தேன். அத்தனையும் விற்று விட்டு வெறும் 3 பழத்தை கொண்டு போய் கொடுத்திருக்கிறானே என ஆத்திரமடைந்து தன்னுடைய பணியாட்களை அனுப்பி அவனை இழுத்து வர சொன்னான். அதிகாலை 4 மணிக்கு வண்டிக்காரனை அழைத்து வந்து புளிய மரத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து விடுகிறார்கள். என்னை எதற்கு அடிக்கிறீர்கள் என சொல்லிவிட்டு அடியுங்கள் என அவன் கூறினான்.
ஜமீன்தார் வந்து பத்தாயிரம் பழத்தை என்ன செய்தாய் என கேட்டார். நான் கோயிலில் கொடுத்தேன் என வண்டிக்காரன் கூற, இல்லை நீ பொய் சொல்கிறாய், 3 பழம் தான் முருகனுக்கு போயுள்ளது என சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு ஆடிப்போன வண்டிக்காரன், சாமி என்னை அவிழ்த்து விடுங்கள் உண்மையை சொல்கிறேன். அதன்படி தான் செல்லும் வழியில் ஏழைப்பெண் ஒருவர் குழந்தையை கையில் வைத்து விட்டு பணம் கேட்டதையும், பின் தான் பழம் கொடுத்த கதையையும் கூறினான்.
இதனையடுத்து ஜமீன்தார் தன் கையில் இருந்த கம்பை கீழே போட்டு வண்டிக்காரனை தொட்டு வணங்கி நீ கொடுத்த அந்த 3 பழம் தான் முருகனுக்கு சென்றது என கூறினார் என சொல்லப்படுகிறது. இதனை நாம் இயலாதவர்களுக்கு உதவுவதன் மூலம் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதற்காக இந்த கதை சொல்லப்படுகிறது.





















