முத்துப்பேட்டை தர்ஹா 721 ஆம் ஆண்டு கந்தூரி விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஜாம்புவானோடையில் உள்ள உலகப் புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா மிக சிறப்பாக இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முத்துப்பேட்டை தர்ஹா 721 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலகப் புகழ் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா மிக சிறப்பாக இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்காரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது. பின்னர் புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது. இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேலதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் என ஊர்வலமாக வந்தது. ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது. அங்கு ஆசாத்நகர் மீன் மார்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது.
அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை அடைந்தது. பின்னர் தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது. பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது.
பின்னர் அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு 9 மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்துக் கொண்டனர். புகழ்பெற்ற முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழா நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வரை 14 தினங்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக்கூடு விழா டிசம்பர் மாதம் நான்காம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. இந்த விழாவை காண தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தருவார்கள்.
இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா டிசம்பர் மாதம் நான்காம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ள நிலையில் அடுத்த நாள் ஐந்தாம் தேதி திங்கள்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் சார்நிலைக் கருவூலங்கள் போன்றவை அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.