திருவெண்காட்டில் 50 ஆண்டுக்கு பிறகு மருத்துவாசுரனை சம்ஹார நிகழ்வு
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெருவடைச்சான் எனும் சப்பரத்தில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சுவர்கள் வலம் வந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு இந்திர பெருவிழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவிற்கான கொடியேற்றம் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ஐந்தாம் நாள் திருவிழாவான அகோர மூர்த்தி அபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக யதாஸ்தானத்தில் இருந்து உற்சவர் அகோர மூர்த்தி புறப்பாடு செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, நூற்றாக்கால் மண்டபத்தில் இரவு எழுந்தருள அங்கு சுவாமிக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், நாட்டு சக்கரை, பழச்சாறு, தயிர், 500 லிட்டர் பால், 1500 லிட்டர் பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அகோர மூர்த்தி உற்சவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொன்றை மரத்தடியில் எழுந்தருளிய அகோர மூர்த்தி சுவாமி முன்பொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை வேண்டி தவம் இருந்து சூலாயுதத்தை பெற்று மக்களையும், தேவர்களையும் துன்புறுத்த தொடங்கினான். இதனை பொறுக்க முடியாத மக்கள் சிவபெருமானிடம் வேண்டினார்கள்.
இதனை அடுத்து சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக மாசி மாதம், பிரதமை திதி, ஞாயிற்றுக்கிழமை, பூர நட்சத்திரத்தில் கூடிய நாளில் நெருப்பு பிழம்பாக மனித உருவில் தோன்றினார். அதனை கண்டதும் மருத்துவாசுரன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான். அப்போது சிவபெருமான் இங்கே தங்கி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன்படி திருவெண்காடு சுவேதாரனேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அகோரமூர்த்தி சுவாமி அருள்பாலித்து வருகிறார். நேற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சேர்ந்து வருவதால் மருத்துவாசுரனை சம்ஹார நிகழ்வு கொன்றை மரத்தடியில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு உற்சவ மூர்த்திகளுடன் புறப்பட்டு, அகோரமூர்த்தி தனித்தேரிலும் உற்சவமூர்த்திகள் தெருவடைச்சான் எனும் சப்பரத்தில் தேரோடும் நான்கு வீதியில் வலம் வந்தனர். வழி நெடுவும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து சாமியை தரிசனம் செய்து வழிபட்டு மேற்கொண்டனர். பிப் 27 -ஆம் தேதி திருக்கல்யாணம், பிப் 29 -ஆம் தேதி திருத்தேர் உற்சவம், மார்ச் 3-ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.