புரட்டாசி மாத பிரதோஷம்! சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
பிரசித்தி பெற்ற புராதண சிறப்பு வாய்ந்த சீர்காழி சட்டைநாதர் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷ வழிபாடில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற புராதண சிறப்பு வாய்ந்த பழமையான சீர்காழி சட்டைநாதர் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடைபெற்ற பிரதோஷத்தை அடுத்து நந்தி தேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியோடு வழிபாடு மேற்கொண்டனர்.
புரட்டாசி மாத திருவிழாக்கள்
கடந்த செப்டம்பர் 17 -ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கியது, புரட்டாசி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு பெருமாள் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக புரட்டாசி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
சீர்காழி சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
பல்வேறு சிறப்புகள்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு
இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோயில் கொடி மரத்தில் அருள் பாலித்து வரும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரவிய பொடி, மஞ்சள், தயிர், பழச்சாறு, தேன், பஞ்சாமிர்தம் , பால், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வழிபாட்டு சென்றனர். மேலும் இக்கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.