மயிலாடுதுறை அருகே திருநங்கைகள் மட்டுமே து நடத்தும் தீமிதி திருவிழா - பக்தியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்
மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் திருநங்கைகள் மட்டுமே ஒருங்கிணைந்து முன்னெடுத்து நடத்தும் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு தெருவில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் சித்திரை உற்சவம் கடந்த மூன்றாம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்தாம் தேதி திருக்கல்யாண வைபவம், 11-ஆம் தேதி காத்தவராயன் நாடகம் ஆகியன நடைபெற்றது. விழாவின் முக்கிய உற்சவமான தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம் எடுத்தும், கையில் வேப்பிலை ஏந்தியும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும், உடலில் அலகு குத்தியும் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்து அடைந்தனர். அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குழியில் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் மட்டுமே ஒருங்கிணைந்து தீமிதி திருவிழாவை நடத்துவது வழக்கம். திருநங்கை பிரவீனா தலைமையில் திருநங்கைகள் ஒருங்கிணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது.
16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்