CBSE Results 2023: வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்; இன்று தொடங்கும் உளவியல் ஆலோசனை: அழைப்பு எண் இதுதான்!
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 12) வெளியான நிலையில், இன்று முதல் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை தொடங்கி உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 12) வெளியான நிலையில், இன்று முதல் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை தொடங்கி உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 27ஆம் தேதி வரை செயல்படும் இந்த ஆலோசனை மையத்துக்கு, மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக இருந்தது. அதேபோல சென்னை மண்டலத்தில் 97.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 3ஆவது இடத்தைப் பிடித்தனர்.
17 லட்சம் பேர் விண்ணப்பித்த தேர்வு
இந்தத் தேர்வை 16 லட்சத்து 96 ஆயிரத்து 349 மாணவர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 15,079 பள்ளிகளில் 6714 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் தனித்தனியாக தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 115 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 16,60,511 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 14, 50,174 மாணவர்கள் தேர்வான நிலையில் தேர்ச்சி விகிதம் 87.33 ஆகக் குறைந்தது.
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகபட்சமாக 97.51 சதவீதமாக உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்ச்சி வீதம் 92.51 ஆக உள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை தொடங்கி உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 27ஆம் தேதி வரை செயல்படும் இந்த ஆலோசனை மையத்துக்கு, மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
இதுகுறித்து சிபிஎஸ்இ ஊடகப் பிரிவு இயக்குநர் ரமா சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை இன்று (மே 13) தொடங்கி உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
2 கட்டங்களாக ஆலோசனை
கடந்த 25 ஆண்டுகளாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வு குறித்தும், தேர்வு முடிந்தபிறகும் 2 கட்டங்களாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
2ஆம் கட்ட தொலைபேசி ஆலோசனை மையத்தில், பள்ளி முதல்வர்கள், பயிற்சி பெற்ற உளவியலாளர்கள், சிறப்பு கல்வி ஆலோசகர்கள் 59 பேர் பங்கேற்று, உளவியல் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இதில் 53 பேர் இந்தியாவில் இருந்தும் 6 பேர் ஐக்கிய அரசு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய வெளிநாட்டில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பர்.
மாணவர்கள் 1800-11- 8004 என்ற எண்ணை அழைத்து உளவியல் ஆலோசனை பெறலாம். இந்தியா முழுவதிலும் இருந்தும் எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.