மயில் உருவம் எடுத்த சிவப்பெருமான் - எங்கே ஏன் தெரியுமா?
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை புராண வரலாற்று நிகழ்வாக அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை புராண வரலாற்று நிகழ்வில் அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வும், சுவாமியின் மாயூரதாண்டவமும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
துலா உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மையப்பகுதியில் ஓடும் காவிரி துலாக்கட்டத்தினை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக ஐதீகம் என்பதால் ஐப்பசி மாதம் 30 நாளும் மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதே போல் வதான்யேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறும்.
முதல் தீர்த்தவாரி
அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17 -ஆம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துலா உற்சவத்தின் பத்து நாள் உற்சவம் விழா சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றம்
அதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடியானது வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து துலா உற்சவ கொடி மரத்திற்கும், விநாயகர் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகள்
இந்நிகழ்வில் மயிலாடுதுறை சுற்றுவாட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆலயத்தில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா மற்றும் தீர்த்தவாரிமும், மயிலம்மன் பூஜை, திருக்கல்யாணம், திருத்தேர் உற்சவம், 15 -ஆம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவமும், 16 -ம் தேதி முடவன் முழுக்கு உற்சவமும் நடைபெறவுள்ளது.
மயிலம்மன் பூஜை
மயிலாடுதுறையில் ஶ்ரீஅபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து வந்தபோது மனம் மகிழ்ந்த சிவபெருமான் ஆண்மயிலாக தோன்றி அம்பிகைக்கு கௌரி தாண்டவத்தில் காட்சி கொடுத்த ஶ்ரீஅபயாம்பிகை சமேத ஶ்ரீகௌரி மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்நிலையில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மயிலம்மன் பூஜை மாயூரநாதர் கோயில் நடைபெற்றது. மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வு புராணவரலாறு படி நடைபெற்றது. பின்னர் நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவகாட்சியோடு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் அபயாம்பிகை அம்மன் சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்டு சிவனுடன் ஐக்கியமாகிய பின் சோடச தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் வரலாறு
பார்வதி தேவியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதி தேவியை யாகத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றுள்ளார். அதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், தன் சொல்லை மீறி யாகத்திற்கு சென்றதால் அம்பாள் பார்வதி தேவியை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் சாபம் இட்டார். அதனால் மயிலாக மாறிய அம்பாள் பார்வதி இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் தந்து அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவபெருமான் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் இவ்வாலயத்தில் உள்ள சிவன் மாயூரநாதர் என பெயர் பெற்றார்.
இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோயில் இதுவாகும்.