குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குபின் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும், சோழ மன்னன் திருப்பணிகள் செய்து வழிபட்டதால் சோழிஸ்வரர் என்றும் பெயர் பெற்றவர். அக்னி பகவானின் பாவங்களை போக்கியவர். சித்தர்கள் முனிவர்கள், ஞானிகள், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் வழிபட்ட தலமாக புராண வரலாறு.
ஆஞ்சநேயர் தாமரைப்பூ கொண்டு வழிபாடு நடத்திய தலம் என்றும் , சோளீஸ்வரர் சுவாமியை திருமண கோலத்தில் தரிசித்து தன் பாவங்களை போக்கிக் கொண்டார் அக்னி பகவான் எனவும், பரத முனிவர் பிள்ளை பேரு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்ததாகவும், அந்த வேள்வியில் தோன்றியவர் தான் பரிமள சுகந்தநாயகி இறைவனை அடைய இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். இத்தலத்து பரிமள சுகந்தநாயகியை வழிபட திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூடும், சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்டதால் இத்தளத்தில் உள்ள சனி ஈஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் போன்ற பல்வேறு சிறப்புகளை உடைய கோயில்,
மகா கும்பாபிஷேகம் விழா 15 ஆண்டுகளுக்கு பின்பு புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு 6 கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று 6 -ம் கால யாகசாலை பூஜையில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் செய்து, பூரணாகுதி மகா தீபாரதனை நடைபெற்றது.
குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோயிலில் யாகசாலை பூஜை.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழிபாடு!
பின்னர் மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய வளாகத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. சுவாமி கருவறை தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் பிரசித்தி பெற்ற கிராம கோயிலான தங்க முனீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகையில் பிரசித்தி பெற்ற கிராம கோயிலான, தங்க முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வ கோயிலாக விளங்கும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த ஆறாம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற நான்காம் கால யாக சாலை பூஜையின் நிறைவில் மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்று, புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான குப்பத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.