பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அபிராமி அம்மன் - எங்கே தெரியுமா..?
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் பட்டருக்காக அமாவாசையை பவுளர்ணமியாக மாற்றிய ஐதீக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தியானத்தில் இருந்த அபிராமி பட்டர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற இத்தலத்திற்கு முன்பு ஒரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது மன்னர் வந்ததை கூட கவனிக்காமல் மன்னருக்கு உடைய மரியாதை செய்யாமல் அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து கோயில் தியான நிலையில் இருந்துள்ளார்.
சின்னம் கொண்ட சரபோஜி மன்னர்
இதனை கண்ட சரபோஜி மன்னர் அருகில் இருந்தவர்களிடம் இவர் யார்? என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அபிராமி பட்டரை பற்றி அவதூறாக மன்னரிடம் கூறியுள்ளார். ஆனால், சரபோஜி மன்னர், அவர்களின் வார்த்தைகளை நம்பாமல், அபிராமி பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய சரபோஜி மன்னர், பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அதற்கு, அம்பிகையின் தியான நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் தவறி பவுர்ணமி என கூறியுள்ளார். அமாவாசையை, பவுர்ணமி என்று தவறுதலாக கூறியதால் மன்னர் சினம் கொண்டார். மேலும் இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறியுள்ளார்.
அபிராமி அந்தாதி பாடிய பட்டர்
இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79 வது பாடலான “விழிக்கே அருள் உண்டு அபிராமி வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார். அப்பொது அபிராமி அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.
பௌர்ணமியாக மாறிய அமாவாசை
அதன்படி தை அமாவாசை தினமான நேற்றிரவு அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது. இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு, ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர். ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
1008 பால்குடம் சுமந்து பக்தர்கள் வழிபாடு
முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு தை அமாவாசையையொட்டி பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி திருக்கடையூர் ஆணைக்குளத்து கரையில் அமைந்துள்ள எதிர்காளஸ்வரர் கோயிலில் இருந்து 1008 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அமிர்தகடேஸ்வரர் கோயிலை அடைந்தனர். அங்கு அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

