சட்டைநாதர் கோயில் ஆடிப்பூரம்: தேரோட்டத்தில் குவிந்த பக்தர்கள்! அருள் மழையில் நனைந்தனர்!
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமரிசையாக ஆடிப்பூர திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம் பொங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

மூன்று நிலைகளில் சிவபெருமான்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.

ஆடி மாத வழிபாடு
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

ஆடிப்பூர தேரோட்டம்
அதன் ஒன்றாக பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சீர்காழி சட்டைநாதர் ஆடிப்பூர உற்சவம் கடந்த 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்பாள் மற்றும் விநாயகர் தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெருகிலும் பக்தர்கள் அம்பாளுக்கு தீபா ஆரத்தி எடுத்தும் அர்ச்சனைகள் செய்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து திருத்தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தேர் சிதிலமடைந்த நிலையில் சமீபத்தில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று ஆடிப்பூரத்தை உற்சவத்தை முன்னிட்டு 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக திருத் தேரோட்டம் நடைபெற்றது.






















