Masi Magam 2024: பக்தர்களே! மாசி மகத்தில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? எது உகந்தது?
மாசி மக தினமானது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாள் ஆகும். இந்த நன்னாளில் ஆலய வழிபாடு மேற்கொண்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மாசி மாதங்களில் வரும் சிறப்பான நாட்களில் மகா சிவராத்திரியை போலவே மாசி மகமும் மிகவும் முக்கியமான நாள் ஆகும். மாசி மகம் வரும் 24ம் தேதி( சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு நாள் உகந்த நாளாக இருக்கும். மாசி மகம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது.
மாசி மகமானது அனைத்து தெய்வத்திற்கும் உகந்த நாள் ஆகும். அதனால், அன்றைய தினத்தில் நமக்கு இஷ்ட தெய்வமான எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வணங்கலாம்.
சிவ பெருமான்:
அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக மாசி மாதம் உள்ளது. இந்த மாதத்தில்தான் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான மகா சிவராத்திரி வருகிறது. மாசி மக தினத்தில் சிவபெருமானை வணங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
இந்த நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பெரும் புண்ணியத்தை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வருண பகவானுக்கு சிவ பெருமான் சாப விமோசனம் அளித்தது மாசிமக தினத்தில் ஆகும். இதனால், மாசி மக நாளில் சிவனை வணங்குவது சிறப்பாகும்.
அம்மன்:
சிவனின் பாதி உமையாள் இந்த மாசி மகத்தில்தான் அவதரித்தார். தட்சனின் மகளாக தாட்சாயிணியாக அவர் அவதரித்த நாள் மாசி மகம் ஆகும். இதனால், இந்த நன்னாளில் அம்மனின் அவதாரங்களை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் குழந்தை பேறு உள்ளிட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
முருகன்:
தந்தை சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தை போதித்தவர் முருகப் பெருமான். சிவனுக்கு முருகன் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறியது இதே மாசி மக நாளில் ஆகும். இதனால், மாசி மக நாளில் முருகனை வணங்கினால் நன்மைகள் உண்டாகும். திருமண பாக்கியம், குழந்தை பேறு, கடன் பிரச்சினைகள் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
பெருமாள்:
பல சிறப்புகளை உள்ளடக்கிய இந்த மாசி மக நன்னாள், பெருமாளுக்கும் உகந்த நாள் ஆகும். மகா விஷ்ணு 10 அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தை எடுத்தது இதே மாசி மகம் ஆகும். பாதாளத்தில் அடைபட்ட பூமியை வராக அவதாரம் மூலமாக பெருமாள் மீட்டுக் கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த நன்னாளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் குறைகள் நீங்கி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும்.
குல தெய்வம்:
எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம் ஆகும். ஏனென்றால், நம் முன்னோர்களையே நாம் குல தெய்வமாக வழிபடுகிறோம். மாசிமக நன்னாளில் அனைத்து தெய்வங்களையும் வணங்குவது நல்லது என்பதால், குலதெய்வத்தை வணங்குவது மிகவும் சிறப்பு ஆகும். எந்தவொரு காரியத்தை செய்தாலும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இருந்தால் அந்த காரியம் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும். இதனால், மாசிமக தினத்தில் குலதெய்வத்தை வணங்கினால் கவலைகள் தீரும் என்பது ஐதீகம் ஆகும்.
கேது வழிபாடு:
மகம் நட்சத்திரத்திற்கு கேது பகவான் அதிபதி ஆவார். இதனால், மாசி மக தினத்தில் கேது பகவானை வணங்கினால் ஞானமும், முக்தியும் கிடைக்கும். கேது பகவானை வழிபட்டால் அறிவாற்றல் சிறக்கும். இந்த நன்னாளில் நவகிரக சன்னிதியில் வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம்.
அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மகத்தில் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று மனதார வேண்டினாலே தங்கள் கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.