ஒரே நாளில் மகா சிவாரத்திரி, சனி பிரதோஷம் - தஞ்சை பெரிய கோயிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
மகா சிவராத்திரியையொட்டி, பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூர்: மகா சிவராத்திரியும், சனி பிரதோஷமும் ஒரே நாளில் வந்ததால் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். இதனால் கோயிலே விழாக்கோலம் போல் காட்சியளித்தது
மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, ஒருநிலைப்படுத்தி சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும்.
அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே.
சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.
ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மஹா சிவராத்திரி விழா இன்று சிவன் கோயில்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோம வார நாளான திங்கள்கிழமையிலும், சனிக்கிழமையிலும் வரும் பிரதோஷம் மிகவும் வலிமையும், வளம் அருளும் பிரதோஷமாக கருதப்படுகிறது. இதேபோல, மகா சிவராத்திரியும், சனி பிரதோஷமும் இணைந்த நாளில் நமசிவாய மந்திரத்தையும், பதிகங்களையும் பாராயணம் செய்து, பிரதோஷ பூஜையிலும், இரவு மகா சிவராத்திரி பூஜைகளிலும் கலந்து கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இதனால், மகா சிவராத்திரியும், சனி பிரதோஷமும் ஒரே நாளில் வந்ததால், தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அப்போது, நந்தியெம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட மங்கள பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, மகா சிவராத்திரியையொட்டி, பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.