கரூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் - விழா பணிகள் மும்மூரம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புனித நீர் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான புகழிமலை முருகன் கோவில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும். மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலிமலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் இப்பகுதி புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய புகழிமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவீன சிற்ப சாஸ்திரம் முறைப்படி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் இரவு கிராமசாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை புகழிமலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் விநாயகர் வழிபாடு, மகா கணபதி யாகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
பின்னர் வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுமார் 3,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை குதிரை, காளை, ஒட்டகம் ஆகியவை முன்னே செல்ல பக்தர்கள் குடங்களில் புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புகழி மலைக்கு வந்தனர்.
பின்னர் புகழிமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் உச்சிஷ்ட மகா கணபதி, மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஷ்வரர், விஷ்ணு ,துர்க்கை, நவக்கிரகங்கள், இடும்பன், மலைக்காவலன், கன்னிமார், பாத விநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி பூஜை, பூமிதேவி வழிபாடு ஆகியவை நடந்தது. காலை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்தங்கள் வழிபாடு, திருமுறை பாராயணம், புண்யாகம், கும்ப அலங்காரம், யாத்திரதானம் , அருள் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளல் , முதல் காலையாக பூஜை நடைபெறுகிறது.
நாளை 2-ம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள், அனைத்து கோபுரங்களுக்கும் கண் திறப்பு மற்றும் கலசங்கள் வைத்தல், மூலஸ்தானம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் என் வகை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ,3-ம் கலையாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் 4-ம் காலயாக பூஜை, மங்கள பூர்ணா குதி ஆறுமுகனின் அருள் சக்தி கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கும் அவர்களின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்கு தலைவரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.