கரூர் மண்மங்கலம் அருள்மிகு ஸ்ரீ அருமை விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அருமை விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
கரூர், மண்மங்கலம் அருள்மிகு ஸ்ரீ அருமை விநாயகர் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம குறிச்சி கிராமம், அருமைக்காரன் புதூர், துளிப்பட்டி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அருமை விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு ஆலயம் மண்டபம் அருகே சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூன்று கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து, கோமாதா பூஜை நடைபெற்ற பிறகு, மேள தாளங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் ஆலயம் வலம் வந்த பின்னர், கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும் தீர்த்த கலசங்கள் சென்றது. அதன் தொடர்ச்சியாக கோபுரகலசத்திற்கு முதலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் கோபுர கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, மகா தீபாரதனை காட்டினர்.
அதைத்தொடர்ந்து மூலவர் அருமை விநாயகர் சுவாமிக்கு மூன்று கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை காட்டப்பட்டது.
ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாட்டை தூளிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மேலும் கரூரில் பல்வேறு ஆலயங்கள் நடைபெற்ற ஆன்மீக தகவல்.
கரூர் மாவட்டத்தில் இன்று வெங்கமேடு, வெண்ணமலை, மண்மங்கலம், கடம்பன்குறிச்சி, மின்னாம்பள்ளி, அரவக்குறிச்சி, புகலூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிப்பாட்டு தெய்வங்களான மாரியம்மன், பகவதி அம்மன், மதுரை வீரன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி, கருப்பண சுவாமி உள்ளிட்ட தெய்வங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டி காய்கறிகள் இலைகள் தேங்காய், பூ பழம் உள்ளிட்ட பொருட்களின் விலை சற்று உயர்வாகவே காணப்பட்டது. அதேபோல் பல்வேறு கோயில்களில் ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்களின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கும்பாபிஷே விழாவின் ஏற்பாடுகளை அந்தந்த ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் நடைபெறும் கும்பாபிஷே விழா என்பதால் ஆட்டம் பாட்டம் என பொதுமக்களின் கூட்டம் கலை கட்டியது.