Kolkata Kali Temple: கல்கத்தா காளிக்கு திருப்பாச்சேத்தியில் தயாராகும் பிரம்மாண்டமான அரிவாள் - ஊழியர்கள் பெருமிதம்
கல்கத்தா காளி கோயிலுக்கு திருப்பாச்சேத்தி அரிவாள் கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் - ஊழியர்கள் பெருமிதம்.
கல்கத்தா காளிக்கு நம்ம ஊர் கருப்ப சாமி அரிவாள் போல இருக்காது. அது சற்று இரண்டு மூன்று இடங்களில் வளைந்து வரும்.
திருப்பாச்சேத்தி கம்பீர அரிவாள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். அரிவாள் செய்வதற்கு பெயர் போன இடம். இங்கு செய்யப்படும் அரிவாள்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. போலீஸார் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப்பதை நிறுத்தி விட்டனர். அதுவும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே தயாரித்து கொடுக்கின்றனர். தற்போது விறகு வெட்டுவதற்கான ஒரு அடி நீள அரிவாளை மட்டும் தயாரிக்கின்றனர். விவசாயத்துக்கு தேவையான கருவிகள் செய்யும் பட்டறை அதிகம் உள்ளது. இங்கு விவசாயத்திற்காக தேவைப்படும் மண்வெட்டி அருவா மற்றும் இரும்பிலான பொருட்கள் செய்யக்கூடிய பட்டறை அதிகம் உள்ளது. கோயில்களுக்கு வேண்டுதல் வைத்து அதிக உயரத்தில் அரிவாள்கள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் இங்கு உள்ள பட்டறையில் செய்து வாங்கி செலுத்துவார்கள்.
கருப்பணசாமி கையில் துடியான அரிவாள்
தமிழகம் முழுவதும் இருக்கும் கருப்பணசாமி கோயில்களுக்கு குறிப்பாக மதுரை அழகர்கோயில் உள்ள காவல்தெய்வம் கருப்பணசாமி கோயில், மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு இங்கு 18 அடி உயரம் முதல் 30 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் செய்து தரப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை அறிந்த கல்கத்தாவில் வசித்து வரும் தமிழர்கள் 2 பேர் இவர்களை தேடி வந்து கல்கத்தா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள் செய்து தரச்சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். கல்கத்தாவில் வசிக்கும் மக்கள் திருப்பாச்சேத்தி அரிவாளை விரும்பி வாங்கிச் செல்வது. இங்கு கிடைக்கும் பொருள் மற்றும் தரத்தை பெருமைபட செய்துள்ளது.
கல்கத்தா காளிக்கு அரிவாள்
கல்கத்தா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்த அரிவாள் செய்து கொடுத்த அரிவாள் பட்டறை தொழிலாளி கார்த்தி லெட்சுமணன் கூறுகையில்.., “திருப்பாசேத்தி அரிவாள் தற்போதும் பெயராக இருக்க காரணம் உண்மையில் அதன் தரம் தான். லாரிகளில் வரக் கூடிய உறுதியான இரும்புகளை பயன்படுத்தி இங்குள்ள அரிவாள் செய்யப்படுகிறது. நேர்த்தியாக செய்யும் முறை பலருக்கும் பிடித்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு அரிவாளும் செய்து கொடுப்பதில்லை. அதிகளவு விவசாயம் மற்றும் ஆன்மீக தேவைக்கு மட்டும் தான் அரிவாள் செய்கிறோம். கருப்பண சாமி அரிவாள்கள் அதிகளவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது கல்கத்தா காளிக்கு நேர்த்திக் கடனுக்கு அரிவாள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கல்கத்தா காளி கோயில் திருவிழாவில் துர்கை மற்றும் காளி வேடமணிந்து அரிவாள் தோளில் தூக்கிச் செல்வார்கள். அதற்காக கல்கத்தாவில் இருந்து ஆர்டர் கொடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு நல்லபடியாக செய்து கொரியரில் அனுப்பி வைத்தோம். கல்கத்தா காளிக்கு நம்ம ஊர் கருப்ப சாமி அரிவாள் போல இருக்காது. அது சற்று இரண்டு மூன்று இடங்களில் வளைந்து வரும். ஒரு கேள்விக்குறி போல காட்சியளிக்கும். அதனால் அவர்கள் கொடுத்த புகைப்படத்தை பார்த்து சிறப்பாக அரிவாள் செய்து கொடுத்துள்ளோம்” என்றார்.