செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழுமத்தூர் - புக்கத்துரை கூட்ரோடு பகுதியில் , திருச்சி சென்னை தேசிய பிரதான சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், 20கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து "
இரவு நேரங்களில் சென்னை திருச்சி பிரதான சாலையில் தென் மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் ஏராளமான ஆம்னி பேருந்துகள் , அரசு பேருந்துகள் மற்றும் சென்னைக்கு பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவு சாலையில் பயணிப்பது வழக்கம். இரவு நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரவு நேர பயணத்தையே விரும்புவார்கள். சில சமயங்களில் இது போன்று இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருச்சியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்னை திருச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் - புங்கதுரை கூட்ரோடு அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக சரக்கு லாரியை முந்த முயற்சி செய்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
4 பேர் உயிரிழப்பு
இதனால் ஆம்னி பேருந்தின் இடது புறம் முழுவதும் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியது . இந்த நிலையில் ஆம்னி பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் , முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதால், முன்னாள் சென்ற ஆம்னி பேருந்தில் பின்புறம் அரசு பேருந்து மோதியது . இந்த கொடூர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியும் மற்றும் வாகனத்துக்குள் சிக்கி இருக்கும் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்றது எப்படி ?
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆர். கே .டி ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பேருந்து, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி சென்ற லாரியில் பின்பக்கம் மோதியுள்ளது.இந்த நிலையில் முசிறியில்இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்து பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அரசு பேருந்தில் பயணித்த ஓட்டுநருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது. அரசு பேருந்து பயணித்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ஆனால் ஆம்னி பேருந்தின் இடது பக்கம், முழுமையாக சேதம் அடைந்ததில், சினிமா காட்சிகளில் வருகின்ற போல் ஆம்னி பேருந்தின் பாதி பகுதி, முன்னே நின்ற லாரிக்குள் சென்றது. இதன் காரணமாக ஆம்னி பேருந்தில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காவல் துறை விசாரித்ததில், திருச்சி அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் மேல்மருவத்தூரை சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் ( 30 ), பிரவீன், சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி ( 53 ) ஆகிய மூன்று பேரில் அடையாளங்களை போலீசார் கண்டுள்ளனர். உயிரிழந்த மற்றொருவரை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்