கரூர் முத்துமாரியம்மன் ஆலய பூக்குழி திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கரூரில் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் சுடும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
தான்தோன்றி மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து அக்னி சட்டி, அழகு, பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கி கம்பம் போடும் நிகழ்வு தொடர்ந்து கரகம் பாலிக்கும் நிகழ்வு என நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.
இந்நிலையில் பங்குனி மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண் பக்தர்கள் மஞ்சள் வேட்டி அணிந்தும் அக்னி சட்டி, பால்குடம், அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை அமராவதி ஆற்றில் இருந்து தான்தோன்றி மலை முக்கிய வீதியில் வழியாக வந்த பிறகு முத்து மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து பகவதி அம்மன் ஆலயம் வாசலில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது பிரார்த்தனையை செய்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு ஆலயம் அருகே நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூக்குழி திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை போலீசாரும், கரூர் தீயணைப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆலயம் அருகே பிரத்தியேகமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தற்போது கரூரில் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் சுடும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.