கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கோபுரத்தில் மேல் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயில் முன்பு வைக்கப்பட்ட பனை ஓலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி-சவுந்தரநாயகி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கணம்புல்ல நாயனார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ராஜகோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இரவு 7.30 மணியளவில் கோவில் வெளிப்புறத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அப்போது தீபம் சுடர்விட்டு எரிந்தது. அதனை பக்தர்கள் பயபக்தியுடன் இருகரம் கூப்பி தரிசித்தனர். பின்னர் சாமிகளின் திருவீதியுலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.