கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய ஆடி தெய்வத் திருமண திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி தெய்வத் திருமண திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் மகா அபிஷேக குழுவின் சார்பாக 25 ஆம் ஆண்டு ஆடி மாத தெய்வ திருமண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி தெய்வத் திருமண திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக காலை, மாலை என இரு வேளையிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. இந்நிலையில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி மற்றும் சௌந்தர நாயகியுடன் திருமண கோலத்தில் காட்சியளித்தனர்.
ஆலயத்தின் சிவாச்சாரியார் யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். மேல தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கல்யாண பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகிக்கும், அலங்கார வள்ளிக்கும் திருமண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ச்சியாக கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்புமிக்க ஆடி தெய்வத் திருமண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய, நமச்சிவாய கோஷத்துடன் கண்டு களித்தனர். பக்தர்களுக்கு ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு மண்டபத்தில் அன்னதானமும் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.