கரூர் லிங்கத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அன்னாபிஷேக விழா
சிவ தொண்டர்கள் சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டினர்.
கரூர் லிங்கத்தூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் லிங்கத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்வாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் ,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்து அதன் தொடர்ச்சியாக காய்கறிகளாலும் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. லிங்கத்தூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
கரூர் உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழிமங்கை உடனுறை அருள்மிகு அடியார்க்கு எளியர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பல்வேறு சிவாலயங்களில் காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை அன்னாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள அருள்தரும் கிளிசேர் மொழிமங்கை உடனுறை அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு ஆண்டிற்கு ஒருமுறை வரும் அன்னாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சிவ தொண்டர்கள் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பல்வேறு தமிழ் பாடல்கள் பாடியபடி சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருள் தரும் கிளிசேர் மொழி மங்கை உடனுறை அருள்மிகு அடியார்க்கு எளியர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.