கரூரில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதி மாரியம்மன் ஆனி மாத திருவிழா
கரூரில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலய ஆனி மாத திருவிழா.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆதி மாரியம்மன் ஆனி மாத திருவிழா.
கரூரில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாரியம்மன் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கோயில் பூசாரி அருள்வாக்குடன் கம்பத்தை பிடிங்க பின்னர் தோளில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்த பிறகு வாழை மரம் தோரணத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக ரத வாகனத்தில் ஆதி மாரியம்மன் கம்பம் மற்றும் கரகம் முக்கிய வீதிகள் வழியாக அமராவதி ஆற்றிற்கு வந்து அடைந்தது.
அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் ஆதி மாரியம்மன் கம்பம் மற்றும் கரகத்தை ஆற்றில் விட்டனர். அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, வானவேடிக்கையும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஆதி மாரியம்மன் ஆனி மாத திருவிழாவை காண ஏராளமான ஆன்மீகப் பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். தான்தோன்றி மலை குடித்தெரு, திருமாநிலையூர், தான்தோன்றி மலை, காளியப்பனூர், கணபதி பாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாறியுடன் ஆதி மாரியம்மன் கம்பத்தை வழியனுப்பி வைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.