Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் காப்பு கட்டுடன் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான முருக பெருமானின் பழனி மலையில் இன்று கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டுடன் துவங்கியது.
பழனி முருகன் மலைக்கோவில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானதாகும். இன்று மதியம் 12 மணிக்கு காப்பு கட்டுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது.
மூலவர் முருகப்பெருமானுக்கும், வேலும், மயிலும், துவார பாலகர்கள், விநாயகர், சண்முகர் வள்ளி தெய்வானை, ஆகியோருக்கு மஞ்சள் நிற கயிறு காப்பக கட்டப்பட்டது. பின்பு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் தங்கள் கைகளில் மஞ்சள் நிற கயிறை, காப்பு கட்டாக கட்டிக்கொண்டு, கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர். மேலும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.18 ஆம் தேதி நடைபெறும்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை..எந்தெந்த மாவட்டங்களுக்கு?
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பின்னர் விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜைகள் நடக்கும். மதியம் 3.15 மணி அளவில் மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும்.மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும்.
19 ஆம் தேதி காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி 18 ஆம் தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.